Movie Reviews

மதராசப்பட்டினம் - விமர்சனம்

நடிப்பு: ஆர்யா, ஏமி ஜாக்சன், அலெக்ஸ், நாசர், பாலா சிங், ஹனீஃபா
கலை: செல்வகுமார்
இசை: ஜி.வி. பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு: நீரவ் ஷா
ஆடை வடிவமைப்பு: தீபாலி நூர்
கதை, திரைக்கதை, இயக்கம்: விஜய்

முதலில் மூன்று கதாநாயகர்களுக்கு (இயக்குநர் விஜய், கலை இயக்குநர் செல்வக்குமார், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா)
 ஒரு சபாஷ். பழைய சென்னையை கண் முன்னே உருவாக்கி, பழைய மதராஸ் இப்படித்தான் இருக்கும் என்று நமக்கு காட்டியிருக்கின்றனர் இம்மூவரும்.  ஒளிப்பதிவில் கால மாற்றங்களை ஒளிப்பதிவு செய்திருக்கும் விதம் அத்தனை அழகு. மதராஸப்பட்டினத்தை அழகிய ஓவியமாக நம் கண் முன் நிறுத்துகிறார். நீராவ் ஷாவின் கேமாரவுக்குக் தன் கலை ஆக்கத்தால் மதராஸப்பட்டினத்தை உயிர்ப்பித்து கொடுத்திருக்கிறார் கலை இயக்குநர் செல்வகுமார். அன்றைய சென்னையில் (மதராஸில்) அழகாகவும் அமைதியாகவும் இருந்த கூவம் நதி, டிராம் வண்டி, சென்ட்ரல் எதிரில் ஓடிய சுத்தமான நதி, தள்ளு வண்டி, அந்தக் காலக் கட்டிடங்கள் என்று எல்லாமே ஒரு கனவு போல் இருக்கிறது. கற்பனை சென்னையை கண்முன்னே கொண்டுவந்த கிராபிக்ஸ் வல்லுனர்களுக்கு ஒரு சபாஷ். காலத்திற்கேற்ப ஆடை வடிவமைப்பு செய்த தீபாலி நூர்க்கு ஒரு சபாஷ்.

வாழ்வின் கடைசி காலத்தில் இருக்கும் மூதாட்டி ஒருவர், நான் இப்பவே மதராசப்பட்டினம் போகணும் என்று தனது பேத்தியோடு சென்னைக்கு கிளம்புகிறார். சுமார் 63 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தோடு தேடி வருகிற அவரது தேடலிலிருந்து கதை துவங்குகிறது. இந்திய சுதந்திரம் அடைவதற்கு முந்தைய ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை அசைபோட்டபடி கதை நகர்கிறது.

மதராசப்பட்டினத்தை ஆண்ட கவர்னரின் மகள் ஏமி. ஆர்யா ஒரு சலவை தொழிலாளி.  சலவைத் தொழிலாளர்கள் இடத்தை காலி செய்துவிட்டு அங்கு கோல்ஃப் மைதானம் கட்ட துடிக்கின்ற ஆங்கிலேயனிடம் இருந்து அந்த இடத்தை மீட்டெடுக்கும் ஆர்யாவின் சண்டை காட்சிகள் அபாரம். ஏமியின் விருப்பத்தை மீறி ஆங்கிலேயே போலீஸ் அதிகாரிக்கு அவரை மணமுடிக்க கவர்னர் விரும்புகிறார். ஆனால் கவர்னரின் மகள் ஏமி ஆர்யாவை காதலிக்கிறார். அடிமையின் காதலை ஏற்றுக்கொள்வானா ஆங்கிலேயன்? வழக்கம்போல் தமிழ் சினிமா வில்லன்கள் போல மாறுகின்றனர் கவர்னரும், போலீஸ் அதிகாரியும். சுதந்திரம் பெற்ற அன்று நள்ளிரவில் நிகழும் சம்பவங்கள் பரபரப்பான திருப்பங்களுடன் விறுவிறுப்பாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. கிளைமாக்ஸை ஒட்டிய காட்சிகள் மனதைத் தொடுகின்றன. படம் முழுவதும் கூடவே இழையோடும் நகைச்சுவை உணர்வு படத்திற்குப் பெரிய பலம்.  போராட்டமும், காதலும், காதலுக்கு எதிரான அதிகார அடக்குமுறைகளுமாக நகர்கிறது படம். இணையாக மூதாட்டியின் தேடலும் தொடர்கிறது. காதலர்கள் ஒன்றிணைந்தார்களா, மூதாட்டி சென்னைக்கு வந்த நோக்கம் நிறைவேறியதா என்பதே க்ளைமாக்ஸ். ஒரு சில இடங்களில் 'டைட்டானிக்' மற்றும் 'லகான்' படங்களின் நெடி அடிக்கிறது. 

துணி வெளுக்கும் சமுதாயத்தைச் சேர்ந்த ஆர்யாவின் புதிய முயற்சி படங்களின் வரிசையில் அவருக்கு மதராஸப்பட்டினமும் சேரும். வீரமிக்க மல்யுத்த வீரனாக சண்டைக் காட்சிகளில் சீறிப் பாய்கிறார். அப்பாவித்தனமான பாவனைகள், ஆங்கிலம் கற்கும் முயற்சிகளில் ஆர்யாவிடம் நிறைய முன்னேற்றம்.
கதாநாயகி ஏமி ஜாக்சன், நடிப்பாலும் அழகாலும் அப்படியே திரையை நிறைக்கிறார். அதிகார வெறி கொண்ட ஆங்கிலேயர்களுக்கு மத்தியில் மனிதத் தன்மை கொண்ட பாத்திரத்தில் ஏமி ஒரு தேவதைதான். புதிய தேசத்தைக் காணும் போது வியப்பு, காதல், கோபம், பரிதவிப்பு, ஆவேசம் என்று அனைத்தும் இவரது அழகிய முகத்தில் துல்லியமாகத் தோற்றம் கொள்கின்றன. மொழிப் பிரச்சினையை அனாயசமாக ஈடுகட்டிவிடுகிறது இவரது விழிகள் பேசும் மொழி. காதலைக் கவிதையாக்குகிறது ஏமியின் நடிப்பு. தமிழில் நடிப்பை தொடர்ந்தால் நம்மூர் நடிகைகளுக்கு நிச்சயம் ஒரு சவாலாக இருப்பார்.

நாசருக்கு கம்பீரமான தோற்றம், மிடுக்கான நடிப்பு. ஏமியை நிச்சயம் செய்து கொள்ளும் ஆங்கிலேய அதிகாரி அலெக்ஸ் நடிப்பில் பிரமாதம். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அதிகார வர்க்கத்தின் இரக்கமற்ற முகத்தின் கச்சிதமான அடையாளமாகத் திரையில் வலம் வருகிறார். மொழிபெயர்ப்பாளராக வரும் ஹனீபா, தன் வித்தியாசமான நடிப்பாலும், சொதப்பல் மொழிபெயர்ப்புகளாலும் கலகலப்பூட்டுகிறார். போட்டோ எடுக்கும்போதெல்லாம் விறைப்பாக நிற்கும் காட்சிகளின்போது தியேட்டரில் சிரிப்பலைகள்.  வாத்தியாரிடம் ஆர்யா ஆங்கிலம் (எ...ஏ....பி...பீ... சி... சீ....) கற்றுக் கொள்கிற அந்த காட்சி தியேட்டரில் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது.  நமது வாக்காளர் அடையாள அட்டை பற்றிய இயக்குனரின் விமர்சனம் தியேட்டரையே குலுங்க வைக்கிறது.

ஜி வி பிரகாஷின் இசையும், பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக ’வாம்மா துரையம்மா’ பாடல்.
படம் முடிந்ததும் அடித்துப்பிடித்துக்கொண்டு வெளியேறும் ரசிகர்கள் கடைசியில் 'டைட்டில்ஸ்' முழுவதையும் பார்த்தபின்பு திரையரங்கைவிட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இத்தகைய புதிய முயற்சியை ஊக்குவித்த தயாரிப்பாளருக்கு வாழ்த்துகள். மதராசப்பட்டினம் - சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் - அருமையான காதல் கதை.

More Movie Reviews

எம் வெங்கடேசன்

 
More Movie Reviews
 
 
 
Photo Gallery
 
Videos

Trailer of 'Nanban'

Guests at chennailivenews prize distribution ceremony