Temples

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம் - 10

"ஒரே குறிக்கோளுடன் உழைப்பவனுக்கு தோல்வியே கிடையாது" - லிங்கன் ஸ்ரீ தன்வந்திரி மகா விஷ்ணுவின் அவதாரம். உலகையே காத்து ரட்சிக்கும் மகாவிஷ்ணு, தன்வந்திரியாக அவதாரம் எடுக்கக் காரணம்:

தேவர்கள் அசுரர்களுடன் போராடி பலம் இழந்தவர்களானார்கள். அவர்களுக்கு உயிர் பயம் ஏற்பட்டது. எனவே படைக்கும் கடவுள் பிரம்மாவிடமும், தேவர்கள் தலைவரான இந்திரனிடமும் முறையிட்டார்கள். தேவர்களுக்கு வாழ்வளிப்பதற்காக பாற்கடல் கடையப்பட்டது. அப்போது கடலிலிருந்து ஸ்ரீதன்வந்திரி பகவான் அவதாரம் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலிருந்து வழங்கிய அமிர்தத்தை தேவர்கள் உண்டதால் பூரண ஆயுளைப் பெற்றார்கள்.

பிரம்மதேவர் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களுடன் ஐந்தாவதாக ஆயுர் வேதத்தையும் படைத்தார். ஆயுர் வேதம் நன்றாக வளர்ந்து பலரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக பிரம்ம தேவர் முதலில் சூரிய பகவானுக்கு உபதேசித்தார். சூரிய பகவானும் நன்கு கற்று எங்கும் பரவச் செய்தார். சூரிய பகவானிடம் ஆயுர் வேதத்தைக் கற்றுத் தேர்ந்த பதினாறு மாணவர்களில் தலையாய மாணவர் 'தன்வந்திரி' ஆவார் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.

சூரிய பகவானே தன்வந்திரி என்றும் புராணங்களில் ஒரு குறிப்பு உள்ளது. அதாவது 'தன்வ' என்ற சொல்லுக்கு ஆகாயம் என்று பொருள். 'தன்வன்' என்றால் ஆகாயத்தில் உலவுபவன் என்று பொருள். ஆகவே இவரையே சூரியன் என்றும் சொல்வார்கள். ஸுக்தகிரந்தங்களில் தன்வந்திரி என்கிற திருநாமம் சூரிய பகவானையே குறிக்கிறது.

எண்ணற்ற மகரிஷிகளும், மருத்துவ முறைகளை ஆராய்ந்து ஏராளமான மருத்துவ நூல்களை எழுதி இருக்கிறார்கள். இதன் தொகுப்பே 'ஆயுர் வேதம்'. மூலிகைகளை வைத்தே பல வியாதிகளைக் குணப்படுத்தும் முறைதான் இது. மனிதர்களின் ஆரோக்கியம் சிறக்க பல நல்ல பயனுள்ள வழிமுறைகள் இந்த ஆயுர் வேதத்தில் உள்ளன. தன்வந்திரி என்கிற வார்த்தைக்கு 'அறுவை சிகிச்சை முறையில் சிறந்தவர்' என்றும் கூறலாம்.

"தன்வந்திரிதான் ஆயுர் வேதத்தைச் சிருஷ்டித்தவர்" என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது. தன்வந்திரியை வைத்திய ராஜா, ஆதர்ஸ மருத்துவர் என்றும் குறிப்பிடுகிறது.  பத்ம புராணம், வாயு புராணம், விஷ்ணு புராணம் போன்றவையும் தனவந்திரி அவதாரம் பற்றி குறிப்பிடுகிறது. இதனால் ஸ்ரீதன்வந்திரி பகவான் 'மருத்துவத் துறையின் பிதாமகர்' என்று அழைக்கப்படுகிறார்.

(வளரும்)

More Temples

கீழையூர் Dr R. கமலா

 
More Temples
 
 
 
Photo Gallery
 
Videos

Trailer of 'Nanban'

Guests at chennailivenews prize distribution ceremony