Temples

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம் - 9

"விடா முயற்சி உடையவன், விரும்பிய அனைத்தையும் பெற்று விடுகிறான்" - ரூஸ்வெல்ட்
ஸ்ரீதன்வந்திரி பகவானே அருளிச் செய்த மூல மந்திரங்கள் 50 கோடி தேவை என, ஞான ஆலயம், ஹிந்து உள்ளிட்ட பல பத்திரிகைகளில் விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதைப் பார்த்து, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு மொழிகளில் மூலமந்திரம் வந்து குவிகிறது.

108 ஹோமங்களை ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கு செய்வித்த பிறகே பிரதிஷ்டை செய்ய வேண்டும் என குரு ஆசிர்வாதம் கிடைத்து அதை சுவாமிகள் அசரீரி வாக்காக எடுத்துக்கொண்டு செயல்பட துவங்குகிறார்.  உற்சவ மூர்த்தியைக் கொண்டு கரிக்கோல (மாயை கோலம்) பயணமாகவே தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடக்கே காசி உட்பட வெளிமாநிலங்களில் பல்வேறு ஊர்களுக்கும் பயணம் செய்கிறார்.

சென்னையைச் சேர்ந்த ஆன்மீக சிந்தனையாளர் ஆர்.எஸ். தவே மற்றும் அவர் துணைவியார், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ரேவதி சங்கர நாராயணன், அவர்களும் சேர்ந்து, சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோயில் ஆலயத்தில் கிழக்கே உள்ள விநாயகர் சன்னதி முன், மகாபலிபுரம் பிரகாஷ் சிற்ப கலைக்கூட உரிமையாளர் திரு லோகநாதன் ஸ்தபதியைச் சந்தித்து, சில நிமிடங்கள் அனைவரும் கூடி பேசினர்.

விநாயகரைப் பிரார்த்தனை செய்து கொண்டு, ஸ்தபதியிடம் சுமார் 8 அடி உயரமுள்ள கருங்கல்லினால் ஸ்ரீதன்வந்திரி சிலையை செய்ய முன்பணம் தரப்பட்டது. இது சுவாமிகளுக்கு விநாயகர் மீதுள்ள பக்தியைக் காட்டுகிறது. இவ்வாறு உற்சவரைக் கொண்டு பல ஆலயங்களிலும், பல இனிய இல்லங்களிலும், திருமண மண்டபங்களிலும், திவ்ய தேசங்களிலும், சைவ, வைணவ க்ஷேத்திரங்களிலும், புனித ஸ்தலங்களிலும் நூற்றுக்கணக்கான மூலிகைகளைக் கொண்டு, 60க்கும் மேற்பட்ட பழங்களைக் கொண்டு, 50க்கும் மேற்பட்ட புஷ்பங்களைக் கொண்டு, நெய், தேன், மற்றும் விசேஷ திரவியங்களைக் கொண்டு, பட்டு பீதாம்பரங்களைக் கொண்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்னிலையில் சுமார் 50 ஹோமங்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள், பத்திரிக்கையாளர்கள், மடாதிபதிகள், திரையுலகத்தினர்கள், அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

50 ஹோமங்கள் நடந்து முடிந்தவுடன் 51வது ஹோமமாக பாண்டிச்சேரி, கடலூர் மெயின் ரோட்டில் முருகப் பாக்கத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். 2004ல் 51வது ஹோமத்தின்போது மகாபலிபுரத்தில் வடிவமைத்து தயாராக இருந்த 8 அடி உயரமுல்ல மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவானை கரிக்கோல பயணமாக கொண்டு வரப்பட்டது. இச்சிலைக்கு புதுச்சேரி மாநில அப்போதைய முதல்வர் மாண்புமிகு ந. ரங்கசாமி அவர்கள் முதல் ஆரத்தி எடுத்து முதலியார்பேட்டையில் துவக்கி வைத்தார். ஸ்ரீதன்வந்திரி பகவான் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

ஏன் கரிக்கோலமாக செல்லப்பட்டது?

ஒரு விக்கிரகம் பிரதிஷ்டை செய்யுமுன் ஊர்வலமாகச் சென்று வருவது ஆதிகாலந்தொட்டு வருகின்ற மரபு. இந்த செய்தி, மக்களுக்குக் கைங்கர்யம் செய்யும் பாக்கியம் ஏற்படவும், பக்தி மார்க்கம் பரவவும், பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கவும் வழி கோலுகின்றது.

51வது ஹோமத்திற்கான கரிக்கோல பயணத்தைத் துவக்கும்போது உற்சவராகவே பயணித்த ஸ்ரீதன்வந்திரி பகவான், மூலவராகவும் உருவெடுத்து இருவருமே ஏக காலத்தில் கிளம்பியதுதான் விசேஷம். 2003ல் தொடங்கி 2004ஆம் ஆண்டு இறுதிவரை 665 நாட்கள், சற்றேறக்குறைய இரண்டு லட்சம் கிலோ மீட்டர் தூரம் இந்தியாவின் பல பாகங்களிலும் கரிக்கோலமாகவே பயணம் செய்தார்.

செல்லும் இடந்தோறும் பக்தர்கள் அவரவர் கையினாலேயே அபிஷேகம், ஆராதனை செய்து புனிதம் சேர்க்க வழி செய்தார். திருநெல்வேலி சங்கரர் நகரிலுள்ள ஒரு பள்ளியில் பயிலும் சுமார் இரண்டாயிரம் குழந்தைகள் தங்கள் கையாலேயே ஸ்ரீதன்வந்திரி பகவானுக்குப் பாலாபிஷேகம் செய்தது மறக்க முடியாத, அனைவரையும் நெகிழ வைத்த செய்தியாகும்.

அப்போது பக்தர்களின் திருக்கரங்களால் எழுதி கொடுக்கப்பட்ட லிகித ஜெப மந்திரங்களைப் பெற்றுக்கொண்டும் மேலும் எழுதச் செய்து பெற்றும் வந்தனர்.

(வளரும்)

More Temples

கீழையூர் Dr R. கமலா

 
More Temples
 
 
 
Photo Gallery
 
Videos

Trailer of 'Nanban'

Guests at chennailivenews prize distribution ceremony