தேவை 50 கோடி லிகித ஜபம்
"மனவலிமை மட்டும் இருந்தால் போதாது. அதை நல்லவிதமாகப் பயன்படுத்தவும் வேண்டும்" - டெங்கர்டெஸ்
சுவாமிகளின் குரு ஆணைப்படி பக்தர்கள் லிகித மந்திரங்களை சேகரிக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டனர். அதாவது ஸ்ரீதன்வந்திரி நாமம். இது நான்கு வரி, இருபது வார்த்தைகள் அடங்கியது. இது எப்படி முடியும் என யோசிக்க ஆரம்பித்தார். இந்த கலியுகத்தில் சாதிக்க முடியுமா? முரளிதர சுவாமிகள் சாதித்துக் காட்டினார். வெற்றியும் கண்டார். லிகித ஜப வேள்வி என பிரத்தியேக நோட்டு புத்தகங்கள் அனைவருக்கும் கொடுத்து ஈடுபட வைத்து எழுதச் செய்தார். மனதினால் சிந்தித்து, வாயினால் சொல்லி கையினால் எழுத வைத்து, கர்ம வினையைப் போக்க ஏறத்தாழ நாற்பத்தாறு லட்சம் பக்தர்கள், 147 உலக நாடுகளிலிருந்து 13 மொழிகளில் எழுதப் பெற்று 108 யாகத்திற்கு பதிலாக 147 ஓமங்கள் செய்து 54 கோடி லிகித மந்திரங்கள் பெறப்பட்டன.
எழுதப்பட்ட மந்திரங்களோடு, மனதைத் தொடும் செய்திகளும் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சில:
1. நான் எழுதிய இந்த மந்திரத்தில் தவறு இருப்பின் என்னை மன்னிக்கவும். ஏனெனில் எனக்கு இரண்டு கண்களிலும் பார்வை கிடையாது. எனக்கு மட்டுமல்ல, என் தங்கைக்கும் கண் பார்வை கிடையாது. இது போன்ற பிறவி யாருக்கும் வரக் கூடாது என்பதற்காக பகவான் ஸ்ரீதன்வந்திரியை வேண்டி எழுதுகிறேன்.
2. நான் எழுதிய இந்த மந்திரத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும். ஏனெனில் எனக்கு ஏழு வயதுதான் ஆகிறது. என் தாத்தா இரண்டு சிறுநீரகமும் செயலிழந்தவர். பகவான் ஸ்ரீதன்வந்திரிதான் அவரைக் காப்பாற்ற வேண்டும். எனக்கு அப்பா, அம்மா இருவரும் இல்லை.
3. ஸ்ரீதன்வந்திரி அருளால் எழுத ஆரம்பிக்கும்போது வீடு கட்டிக் கொண்டிருந்தேன். ஆனால் முடிப்பதற்குள் வீடு கட்டி முடித்து விட்டேன்.
4. நான் எழுதிய இந்த மந்திரத்தைக் கண்டிப்பாக பிரதிஷ்டை செய்யவும். இந்துக் கடவுளையும், இந்து மதத்தையும் மதிக்கிறேன். தாளில் எழுதினால் ஆயுள் இல்லை என்று கருதி செப்புத் தகட்டில் எழுதியுள்ளேன். நான் வேற்று மதத்தைச் சேர்ந்தவன் என்பதால் ஒதுக்கி விடாதீர்கள்.
(இதிலிருந்து ஜாதி, மத, இன வேறுபாடின்றி நடைபெற்றது என்பது தெள்ளத் தெளிய அறிய முடிகிறது.) 5. என் கணவர் உடல் நலமின்றி மருத்துவமனையில் இருந்தார். பகவான் ஸ்ரீதன்வந்திரியை மாங்கல்ய பலம் அருள வேண்டி எழுதியுள்ளேன். அவர் அருளால் என் கணவர் குணமடைந்துள்ளார்.
6. இந்த மந்திரத்தை செல்வம், ஆரோக்கியம் கடன் பிரச்சினை தீர்தல், உத்தியோகம், திருமணம், வியாபாரம் போன்ற பலவகை பிரார்த்தனைக்காகவும் எழுதுகிறேன்.
7. 92 வயது பாட்டி கஷ்டப்படாமல் இறைவனடி சேர எழுதியுள்ளார்.
8. பிறந்த பலனை அடைந்துவிட்டேன். இந்த மந்திர சொத்தில் நானும் ஓர் அங்கத்தினன் என்று ஒரு பக்தர் எழுதியுள்ளார்.
சுவாமிகளின் ஆதரவால், அன்பு கட்டளையால், மக்கள் பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு மந்திரம் எழுதும் வாய்ப்பைப் பெற்றது பெரும் பாக்கியமாகும்.
"மனிதர்கள் அழிவதுண்டு. மந்திரங்கள் அழிவதில்லை," என்பது சுவாமிகளின் நினைவு. மந்திரம் எழுதும்போதே பலவகை அற்புதங்கள் நிகழ்ந்திருக்கிறதென்றால் பிரதிஷ்டை செய்தபின்? யோசித்துப் பாருங்கள்.
(வளரும்)
|