|
சென்னை, பிப்ரவரி 03: எந்த தாய்மொழியை பேசினாலும் பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயம் படிக்கவேண்டும் என்பதில் மாற்றமில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தின்போது, காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத் பேசும்போது, "தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற வேறு மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும் என உள்ளது. இதனால் வேறுமொழி பேசும் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்மொழியை கட்டாயம் படிக்க செய்வதால் சிறுபான்மை மாணவ - மாணவிகளுக்கு இருக்கும் பிரச்னையை தெரிவித்தேன். நாங்கள் தமிழ் மொழிக்கு எதிரி அல்ல. எங்கள் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
தெலுங்கிலும், கன்னடத்திலும் பேசி அவர் தெரிவித்த இந்த கருத்துக்கு அதேப்போன்று அவ்விரு மொழிகளிலும் பதிலளித்த முதலமைச்சர் ஜெயலலிதா, "தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்கள் தாய்மொழி எதுவாக இருந்தாலும் கட்டாயம் தமிழ்மொழி படித்தாக வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. கர்நாடகத்தில் கன்னடம் படித்தாக வேண்டும், ஆந்திராவில் தெலுங்கு படித்தாக வேண்டும்.
அதுபோல் தமிழ்நாட்டில் கட்டாயம் தமிழ்படிக்க வேண்டும் என்பதில் எந்த தவறும் அல்ல. இதில் மாற்றமும் இல்லை. உறுப்பினர் பேசும்போது, தமிழ் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை. தலைமை ஆசிரியர்கள் இல்லை என்று குறிப்பிட்டார். அந்த பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
|