|
சென்னை, பிப்ரவரி 03: தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கான ஒரே தீர்வாக உள்ள கச்சத்தீவை நிச்சயம் மீட்டே தீருவேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் சட்டமன்ற கட்சி தலைவர் ஆறுமுகம், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, "இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவை மீட்பது தான். அதற்காகத்தான் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம். இதுகுறித்து ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் வழக்கு தொடர்ந்திருந்தேன்.
உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தமிழக அரசின் வருவாய் துறையையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். தமிழக மீனவர்களின் வாழ்வா தாரத்தை காப்பாற்றுவதற்கு ஒரே வழி கச்சத்தீவை மீட்பது தான். அந்த கச்சத்தீவை மீட்கும் வரை நான் ஓயமாட்டேன்" என்று கூறினார்.
|