நிகழ்வுகள்

காஞ்சி மகா பெரியவர் -8

அலகிலா விளையாட்டுடையான்!!!

மயிலாடுதுறை அருகில் உள்ள ஒரு கிராமம் கோழிக்குத்தி. அங்கு வசித்து வந்த ஹாலாஸ்ய நாதன் - சரஸ்வதி என்ற தம்பதியர் பெரியவாளிடம் பக்தி கொண்டு அவரை அவ்வப்போது தரிசித்து வருவதுடன் எந்த ஒரு பிரச்சினை என்றாலும் பெரியவாளிடம் நேரிலோ அல்லது வீட்டில் அவர் திரு உருவப்படம் முன்போ முறையிட்டு அருள் பெறுவது வழக்கம். ஒரு முறை ஹாலாஸ்யம் தன் குடும்பத்துடன் காஞ்சீபுரம் சென்று கருணைக்கடலை தரிசனம் செய்தார். பெரியவாள் மூங்கில் தட்டி மறைப்பால் செய்த குடிலில் இருந்து தரிசனம் வழங்கும் போது எதிரில் அறைக்கு வெளியே நின்ற ஹாலாஸ்யத்த உள்ளே வரும்படி அழைக்க அவர் மட்டும் உள்ளே சென்றார். பெரியவாளிடம் உரையாடிக் கொண்டிருந்த ஹாலாஸ்யத்தை திடீரென வந்த ஒரு பெரிய கருந்தேள் கொட்டிவிட்டு பெரியவாளை நோக்கி நகர்ந்தது. தாளாத வலியின் கடுப்பால் அவதியுற்ற ஹாலாஸ்யம் பெரியவாளையும் கொட்டிவிடும் என்று பதறி 'தேள் தேள்" என அலறினார்.

பிரேமையின் வடிவான பெரியவாள் சலனமில்லாமல் ஹாலாஸ்யத்தை பார்த்து 'என்ன தேள் கொட்டிடுத்தா? தேள் கொட்டினால் எப்படி இருக்கும்? என்ன பண்ணனும்? என வினவினார். 'தேள் கொட்டினா ரொம்ப வலிக்கும். மயக்கமாவரும்' என்றார் ஹாலாஸ்யம். 'இப்ப அப்படி எல்லாம் இருக்கா? இல்ல எறும்பு கடிச்சாப்பல இருக்கா? என்று பெரியவாள் கேட்டார். என்ன அதிசயம்! ஹாலாஸ்யத்தை வேதனைப்படுத்திக் கொண்டிருந்த கடுப்பு மறைந்து எறும்பு கடித்தது போல வலி குறைந்தது.

உடனே பெரியவாள் சிப்பந்தி ஒருவரை அழைத்து 'மூலையில் ஊறும் தேளை எடுத்து வெளியே போடு' என உத்தரவிட வந்த சிப்பந்தியும் சர்வ சாதாரணமாய் தேளின் கொடுக்கை சரியாகப் பிடித்து எடுத்து வெளியே போட்டார். இதைக் கண்ட அனைவருக்கும் உடம்பு வேர்த்தது. மஹான்கள் சந்நிதியில் விஷ ஜந்துக்கள் கூட தங்கள் இயல்பான தன்மையை இழந்து நல்ல குணம் பெறும் போலும்! இந்த உண்மையை நிதர்சனமாகக் கண்ட அனைவரும் வியந்தனர். பெரியவாள் சாக்ஷாத் வைத்தீஸ்வரனே என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.

அன்றிலிருந்து ஹாலாஸ்யத்தின் ஊரில் யாருக்காவது தேள் கொட்டினாலோ விஷக்கடி என்றாலோ அவருடைய வீடு தேடி வர ஆரம்பித்தார்கள். அவரும் உடனே கை கால்களைக் கழுவி நெற்றியில் திருநீறு பூசிக் கொண்டு நடமாடும் தெய்வம் திரு உருவப்படத்தின் முன் நின்று வந்தவருக்கும் திருநீற்றைப் பூசி பெரியவாள் திருநாமத்தை மூன்று முறை உரக்க அழைத்து மனமாற வேண்டுவார். உடனே விஷம் இறங்கி வலி தெரியாமல் போவது தான் பேரதிசயம். இது தான் நாடிவந்தவரின் பிணிக்கு மருந்தாகும் பெரியவாள் மஹிமை.

More நிகழ்வுகள்

 
More நிகழ்வுகள்
 
 
 
Photo Gallery
 
Videos