கட்டுரைகள்

மார்கழி நோன்பு

மாதங்களில் சிறந்து விளங்குவது மார்கழி மாதமாகும். மக்கள் மனத்திலுள்ள மாசுகளையும் புற அழுக்குகளையும் போக்கும் மாதம் இதுவாகும். கண்ணன் "நான் மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன்" என்று கூறியதாகப் பகவத் கீதை கூறுகின்றது.

தமிழ்நாட்டில் மக்கள் இம்மாதத்தை விழா மாதமாகவே கொண்டாடுவார்கள். இம்மாதத்தின் முதல் நாள் தொடங்கி முடிவு நாள் வரை மக்கள் விடியலில் எழுந்து தெருக்களைத் துப்புரவு செய்து, நீர் தெளித்துக் கோலமிட்டு, பூசணிப் பூ வைத்து மகிழ்வர். வீட்டின் வாசலின் நிலையில் விளக்கேற்றி வைப்பர். ஆடவரும், பெண்டிரும் தூய நீரில் குளித்து, தத்தம் சமயப் பாடங்களையும் பாடுவர். தமிழ்நாட்டுக் கோயில்களிலெல்லாம் வேறு எந்த மாதங்களிலும் விடியலில் ஒலிக்காத பூசை மணி ஒலி, மார்கழி மாதத்தில் மட்டும் விடியற்காலையில் ஒலிக்கும். அகமாசும், புறமாசும் ஒருங்கே அகலும் மாதம் இதுவே.

இந்த மார்கழியில் மங்கையர் 'பாவை நோன்பு' மேற்கொள்வர். மணமான பெண்கள் இம்மாதத்தை மங்கல மாதமாகக் கொண்டு, நீராடி மகிழ்ந்து, நல்லறங்களைப் புரிவர். மணமாகாத கன்னிப் பெண்களோ, இம்மார்கழி மாதத்தில் தாம் வழிபடும் கடவுளைத் தமக்கு நல்ல கணவரை நல்குமாறு வேண்டுவர். சைவரும், வைணவரும் இவ்விழாவைக் கொண்டாடி வந்தனர். மணிவாசகர் பாடிய 'திருவெம்பாவை'-யும், ஆண்டாள் பாடிய 'திருப்பாவை'-யும் இவ்விழாவை வலியுறுத்துவன.

"மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றாலும் நாணாமே
போன திசை பகராய்"
என்றும்,
"கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண்"
என்றும்,
"கும்பகருணனும் தோற்றும் உனக்கே
பெருந் துயில் தான் தந்தானோ?"
என்றும் ஒருவரையொருவர் நையாண்டி செய்து கொண்டு மணமாகாத பெண்கள் அனைவரும் எழுந்து ஆற்றங்கரைக்கோ, குளக்கரைக்கோ சென்று தூய குளிர்ந்த நீரில் தோய்ந்து ஆடுவர்.
"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளில்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்"
என்று மார்கழியின் ஆதிரை நாளாகிய நிறைமதி நாள் சிறப்பிக்கப்படுகிறது.
"மொய் ஆர் தடம் பொய்கைப் புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து"
என்று அப்பெண்கள் ஆடும் நிலையை மாணிக்க வாசகர் கூறும்போது நம்மை நாமே மறக்கின்றோம்.
நீராடிய பின் பெண்கள் ஒன்று கூடி பூச்சூடியும், ஆடை உடுத்தும், அறுசுவை உண்டி உண்டும் மகிழும் விழாவாக அமைகின்றது என்பதை ஆண்டாளே காட்டுகிறார்.
"கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! உன்றன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சன்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப்பூவே
பாடகமே என்று அனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம்; அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்!"
என்ற பாடல் அவர்தம் உண்டாட்டை விளக்குகின்றது.
தாம் வேண்டும் கணவரைக் கேட்டு மார்கழி நோன்பு கொண்டாடும் மகளிர், இவ்வுலகம் வாழ நன் மழையைப் பெய்வித்து, விளைவினைப் பெருக்கக் கடவுளை வேண்டுகின்றனர். தானியங்கள் விளைந்து, பசுக்கள் பால் சுரந்து, வையகம் துயர் நீங்கி வளம் கொழிக்க ஆண்டாளும், மணிமொழி வாசகரும் ஆண்டவனை நோக்கி வேண்டும் பாடல்கள் மக்கள் உள்ளங்களில் என்றும் தங்குவனவாகும்.
"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி - பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய்"
என்று ஆண்டாள் வையகம் வாழ வேண்டிய உண்மையை உணர்ந்து வேண்டுவது குறிப்பிடத் தக்கதாகும்.

இம்மாத இறுதி நாளில் எல்லாக் கழிவுகளையும் அப்புறப்படுத்தி, அனைத்தையும் நெருப்பிலிட்டுப் பொசுக்கி நீராடி மகிழ்வர்.

வையகத்தை வாழ்விக்க நோற்கும் இம்மார்கழி நோன்பு நம்நாட்டுப் பழம் பெரும் விழாக்களுள் ஒன்று என்பதை எண்ணும்போது மகிழ்வு உண்டாகிறது.

More கட்டுரைகள்

கீழையூர் Dr. R. கமலா

 
More கட்டுரைகள்
 
 
 
Photo Gallery
 
Videos

Trailer of 'Nanban'

Guests at chennailivenews prize distribution ceremony